வவுனியாவில் கிராமிய வாழ்வை மாற்றியமைக்கும் “சபிரி கமக்” Clean Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பம்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

    

வவுனியா புளியங்குளம் லைக்கா கிராமமானது, கடந்த 2026 மார்ச் 16 ஆம் திகதி புதியதொரு அபிவிருத்தி யுகத்திற்குள் கால்பதித்தது.

“நாட்டை கட்டியெழுப்பும் வளமான கிராமம்” (சபிரி கமக்) மற்றும் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், சமூக உற்பத்தித்திறன் கிராமங்களை மக்கள் மயப்படுத்தும் பிரதான நிகழ்வு அங்கு மிக விமர்சையாக நடைபெற்றது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, கிராமிய மட்டத்திலான வாழ்வாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம், நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், புளியங்குளம் கிராமத்தில் நீண்டகாலமாக மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட முன்பள்ளி கட்டடத்திற்குப் பதிலாக, சகல நவீன வசதிகளுடனும் கூடிய பாதுகாப்பான புதிய முன்பள்ளி கட்டடம் இதன்போது மாணவர்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இதன்மூலம் அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் அச்சமின்றி சிறந்ததொரு கல்விச் சூழலில் தமது ஆரம்பக் கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வவுனியா மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் ஒரு கிராமம் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இந்த அபிவிருத்தித் திட்டம் மாவட்ட ரீதியாக விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் சமச்சீரான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டமானது கல்வி, பொருளாதார அபிவிருத்தி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், வீட்டு முகாமைத்துவம், சமூக நல்வாழ்வு மற்றும் கலாசார ஆன்மீக வளர்ச்சி, மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகிய ஆறு பிரதான துறைகளை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
கிராம மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு நேரடிப் பலன்களைத் தரும் வகையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதோடு, அரச அதிகாரிகளும் கிராம மக்களும் இணைந்து இந்த மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கலான்ஜலி டி அருணசாந்த, ஏனைய அரச அதிகாரிகள், Clean Sri Lanka அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான கிராம மக்கள் கலந்துகொண்டனர்.