புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்குப் புனித நூல்கள் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் அதற்கு எதிராகச் சில அமைப்புகள் விடுத்துள்ள எச்சரிக்கைகள் குறித்து, சர்வதேச இந்துமத குரு பீடாதிபதியும் அகில இலங்கை சபரிமலை சாஸ்தா பீடத்தின் குரு முதல்வருமான ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு மதத்தவருக்கும் தமது மதத்தின் பெருமைகளை எடுத்துரைப்பதற்கும், தத்தமது சமய நெறிகளைப் பிரசாரம் செய்வதற்கும் முழுமையான உரிமை உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு பெற்றோர் தமது பிள்ளையை “நல்ல பிள்ளை” என்று போற்றுவதைப் போன்றே சமயப் பிரசாரங்களும் அமைய வேண்டும் என்றும், மாறாகப் பிற மதங்கள் தவறானவை என்று விமர்சிப்பதற்கோ அல்லது அவற்றை இழிவுபடுத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஒரு மதத்தின் புனித நூல்களை எரிப்போம் அல்லது கொளுத்துவோம் என்று கூறுவது பண்பாடற்ற மற்றும் நாகரிகமற்ற செயல் என அவர் வன்மையாகக் கண்டித்தார்.
தமது சமயத்திற்குப் பிற மதப் பிரசாரங்கள் தேவையில்லை எனக் கருதுபவர்கள் அதனைத் தடுத்து நிறுத்தலாமே தவிர, புனித நூல்களைத் தீயிட்டுக் கொளுத்துவதாக எச்சரிப்பது மதங்களுக்கு இடையிலான முறுகல்களை மேலும் தீவிரப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
மேலும், மத மாற்றம் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், ஒருவர் தனது மதத்தை மாற்றிக் கொள்வதையோ அல்லது பிறரைத் தனது மதத்திற்கு மாற்றுவதையோ ஒருவன் தனது தாயையே விலை பேசுவதற்குச் சமமான ஒரு செயலாகத் தான் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
தான் ஒரு இந்து மதத் தலைவராக இருந்தாலும், பைபிள் மற்றும் குர்ஆன் போன்ற பிற மதங்களின் புனித நூல்களையும் வாசித்திருப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு நூலகத்தில் நமக்கு விருப்பமான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதைப் போல, அனைத்து மத நூல்களிலும் உள்ள நல்ல கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை என்றார்.
இருப்பினும், பிற மத நூல்களைப் பாடசாலைகளில் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அதேவேளை அனைத்து மதங்களும் தத்தமது நம்பிக்கையாளர்களுக்குப் பெரியவை என்பதை உணர்ந்து, பிறர் மனதைப் புண்படுத்தாமல் சமய நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றும் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தனது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

