அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் இலங்கை: கடலில் தேங்கிக்கிடக்கும் எரிவாயு கப்பல்கள்! 

Meiveli Media Team

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இலங்கை தனது சமையல் எரிவாயுத் தேவையை அமெரிக்காவிடமிருந்து பூர்த்தி செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி எரிவாயு தற்போது மாலைதீவு கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் போதிய களஞ்சிய வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, 22,000 தொன் எரிவாயுவைச் சுமந்து வந்த கப்பல் மாலைதீவு கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக லிட்ரோ  எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஓமானில் இருந்து எரிவாயுவைப் பெறுவதற்குப் பதிலாக, அமெரிக்காவிடமிருந்து பெற்று ஆபிரிக்கா ஊடாக மாலைதீவுக்குக் கொண்டு வருவதன் மூலம் போர் வலயத்தைத் தவிர்க்க முடிந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறுகிறது. அமெரிக்காவில் எரிவாயுவின் விலை சற்றே குறைவாக இருந்தாலும், மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்துச் செலவு  அதிகமாகிறது என்றும்,  இதனால் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இன்னும் எரிவாயுப் பற்றாக்குறை நிலவுவது குறித்து விளக்கமளித்த தலைவர், தனியார் நிறுவனமான லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவை ஈடுசெய்யும் பொறுப்பு லிட்ரோ நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கேரவலப்பிட்டியவில் போதிய இடவசதி இல்லாததால், மாலைதீவில் உள்ள பெரிய கப்பலில் இருந்து சிறிய கப்பல்கள் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு எரிவாயு கொண்டு வரப்படுகிறது. தற்போது சந்தைக்கான தினசரி விநியோகம் 1,200 தொன்னில் இருந்து 1,700 தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் மத்தியில் நிலவும் அச்சம் காரணமாக மேலதிகமாக கொள்வனவு செய்வதால் தட்டுப்பாடு நிலவுகிறது எனக் குறிப்பிட்ட அவர் அடுத்த கப்பல், 33,000 தொன்  உடன் மார்ச் 17ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.