இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் இந்தியாவிலுள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Meiveli Media Team

தனக்கு எதிராக இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அவதூறு கட்டுரைகளை நீக்கக் கோரி, இந்தியாவிலுள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவின் செல்லுபடித்தன்மை குறித்து, கூகுள் நிறுவனம் மற்றும் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு இன்று கேள்வி எழுப்பியுள்ளன. பிராந்திய அதிகார வரம்பை அடிப்படையாகக் கொண்டே இந்த மனுவின் சட்டபூர்வத் தன்மை குறித்து அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கூகுள் எல்.எல்.சி சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி மனு பி. குல்கர்னி வாதிட்ட போது,
இந்த மனு ஏன் இங்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது? இது சட்டப்படி செல்லுபடியாகாது. மனுதாரர் இலங்கையைச் சேர்ந்த ஒரு நீதியரசர். சர்ச்சைக்குரிய கட்டுரைகள் இலங்கையிலிருந்து வெளியானவை. கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான மனுக்கள் அனுமதிக்கப்பட்டால், சர்வதேச ரீதியாக இத்தகைய வழக்குகளின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவிடும். இங்கிருக்கும் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மனுதாரர் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் சட்டத்தரணி மதுகர் எம். தேஷ்பாண்டேவும் இதே கருத்தை முன்வைத்ததுடன்,இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான வலுவான காரணங்கள் இன்னும் முன்வைக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த நீதியரசர் நவாஸ் தரப்பு சட்டத்தரணிகள், இந்திய அரசியலமைப்பின் 14ஆம் உறுப்புரை இந்தியக் குடிமக்களுக்கும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் சமமாகப் பொருந்தும் எனச் சுட்டிக்காட்டினர். உலகில் எந்தவொரு நீதிபதியும் அவதூறுச் செய்திகள் மூலம் அச்சுறுத்தப்படக் கூடாது. கூகுள் ஒரு இடைத்தரகர் என்ற ரீதியில், இந்தியா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு இத்தகைய அவதூறுகளைப் பரப்பியுள்ளது. ஆஸ்திரேலிய நீதிமன்ற தீர்ப்பொன்றைச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஒரு இடைத்தரகர் அவதூறு குறித்து அறிவிக்கப்பட்ட பின்னரும் நியாயமான காலப்பகுதிக்குள் அதனை நீக்காவிடின், அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என வாதிட்டனர்.
கொழும்பு டெலிகிராப்’ மற்றும் ‘லங்கா ஈ நியூஸ்’ போன்ற இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதிய ஊடகவியலாளர், தற்போது முகநூல் தளத்திலும் நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை இடுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.மனுதாரர் ஏன் இலங்கையில் வழக்குத் தொடரவில்லை என்ற கேள்விக்கு, அவர் அங்கு உச்சநீதிமன்ற நீதியரசராக இருப்பதால், அவர் தாக்கல் செய்யும் வழக்கில் பக்கச்சார்பு ஏற்படலாம் என்ற ஐயம் எழக்கூடும் என்பதாலேயே இந்தியாவில் வழக்குத் தொடரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதியரசர் சச்சின் சங்கர் மகதூம், மனுவில் கூகுள் நிறுவனத்தின் முகவரியில் உள்ள தவறுகளைத் திருத்துமாறு உத்தரவிட்டார் . மேலும், தவறாகச் சேர்க்கப்பட்டிருந்த ‘கூகுள் இந்தியா’ என்ற இரண்டாம் எதிர்மனுதாரரை மனுவிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தினார். இந்த வழக்கின் அடுத்தகட்ட பூர்வாங்க விசாரணை வரும் ஏப்ரல் 06, 2026 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

