வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை ஒரு கடமையாகக் கருத வேண்டும்: கரு ஜயசூரிய தெரிவிப்பு
Meiveli Media Team

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது அநீதியான செயலாகும் என்றும் வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை ஒரு கடமையாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கான ஆட்சி அதிகாரத்தை கோரி போராடினர். அதற்காகப் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. எனவே, அந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதை ஒரு கடமையாகக் கருத வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாகாணசபைகள் இயங்காமல் அரச இயந்திரம் சரியாகச் செயற்பட முடியாது. அரச நிர்வாகக் கட்டமைப்பு முறையாக இயங்காத காரணத்தினால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோருவதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற சபை முதல்வர், மற்றும் ஒரு நிகழ்வின் போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் அவர்கள் அனைவரும் இந்த கருத்துக்கு முழுமையாக இணக்கம் தெரிவித்தனர் என்றும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த தேர்தல்களின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பற்றியும் அவர் கருத்துரைத்திருந்தார். தாம் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போதும், இதனை நிச்சயமாக ஒழிப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

