ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்துகள் அடிப்படையற்றவை: ஆதவ் அர்ஜுனா மீது நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
Meiveli Media Team

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்துகள் அடிப்படையற்றவை என்றும், அவை ரஜினியின் ரசிகர்களை புண்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். நயினார் வெளியிட்ட அறிக்கையில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய திரையுலகின் மிக மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆண்டவர். தாதாசாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகளை பெற்றவர். திரைத்துறைக்கு அப்பால் அவரது பணிவு, ஆன்மீகப் பார்வை, அனைத்து சாதி, மதம், மொழி, பிராந்திய மக்களிடமும் கொண்டுள்ள அன்பு ஆகியவை அவரை சிறப்பான நபராக உயர்த்தியுள்ளன’ என்று புகழ்ந்துள்ளார். ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் குறித்து வெளியிட்ட கருத்துகளை ‘பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக செய்யப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்’ என்று கண்டித்துள்ளார். ‘ரசிகர்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து இப்படி பேசுவது மிகவும் தகாதது. இதை தவெக தலைவர் விஜய் கண்டிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆதவ் அர்ஜுனா உடனடியாக ரஜினிகாந்த் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவெக தலைமை இத்தகைய கருத்துகளிலிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இனி இத்தகைய நடத்தையை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தவெக தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

