அரசாங்கம் அடக்குமுறையை கைவிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் – நாமல் ராஜபக்ச காட்டம்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் பொலிஸ் துறையின் அரசியல்மயமாக்கல் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இன்று பொலிஸ் துறையானது அரசாங்கத்தின் தேவைக்கேற்பவே இயங்குவதாகவும், குறிப்பாக பொலிஸ் மா அதிபர் நாட்டின் பொதுவான அதிகாரியாக அன்றி, ‘திசைகாட்டி’ (தேசிய மக்கள் சக்தி) தரப்பினரின் தேவைகளை நிறைவேற்றும் ஒருவராகவே செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அண்மையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து பொலிஸ் அதிகாரிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
​தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது அரசாங்கம் முன்னெடுத்து வரும் அழுத்தங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவரின் பெயரை எழுதும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுரேஷ் சலே போன்ற அதிகாரிகளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது அரசியல் பழிவாங்கலின் உச்சக்கட்டம் என அவர் சாடினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தமக்கு சாதகமான முடிவுகளைப் பெற அரசாங்கம் இவ்வாறான கீழ்த்தரமான தந்திரங்களைக் கையாள்வதாக அவர் குறிப்பிட்டார்.

​பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் சுமைகள் குறித்துப் பேசிய நாமல் ராஜபக்ச, தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், இப்போது உலகளாவிய நெருக்கடியைக் காரணம்காட்டி மக்கள் மீது மேலதிக சுமைகளை ஏற்றி வருவதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட துறைகளுக்குச் சலுகைகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலும், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதும், சாதாரண மக்களுக்கு ஒரு நீதியும் அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியும் என்ற பாரபட்சமான நிலைப்பாடு தொடர்வதையும் அவர் கண்டித்தார். இறுதியாக, அடக்குமுறையின் மூலம் ஒருபோதும் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டு, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.