அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவத்தால் நாடு பாரிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்குகிறது: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இன்றைய தினம் (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கம் மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுமானால் இவ்வாறானதொரு கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது எனக் கூறிய போதிலும், தற்போது எரிபொருளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முற்படுவது அவர்களின் முரண்பாடான நிலைப்பாட்டையே காட்டுகிறது என்றார். இந்த QR முறையினால் சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி மற்றும் சிற்றுண்டிச்சாலை தொழில்கள் வீழ்ச்சியடைவதுடன், சாதாரண பொதுமக்கள் தமது தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
தொடர்ந்து மின்சார உற்பத்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் மின்சாரத் தேவையில் 40 வீதத்தைப் பூர்த்தி செய்யும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியைக் கொள்வனவு செய்வதில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அண்மையில் இலங்கைக்கு வந்தடைந்த 9 நிலக்கரி கப்பல்களிலும் தரம் குறைந்த நிலக்கரியே காணப்படுவதாகப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டில் கட்டாய மின்சாரத் தடை ஏற்படும் என எச்சரித்தார்.
தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தித் திறன் 40 வீதத்தால் குறைவடைவதுடன், இக்கொள்வனவு மூலம் நாட்டுக்கு சுமார் 8,497 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நிலக்கரிக்கு மாற்றீடாக டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிட்டால், ஒரு அலகு மின்சாரத்தின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், இது மக்களின் மின்சாரப் பட்டியலை மேலும் பாரியளவில் உயர்த்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கையின் வெளிநாட்டு வருமான வழிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் எரிபொருள் மீதான வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறியுள்ளதாக மரிக்கார் சாடினார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரை எரிசக்தி அமைச்சராக நியமித்துள்ளமை குறித்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், அத்தகைய அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இறுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்தது போல, ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் எனவும், அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து நாட்டின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

