இந்துக்களின் பெருஞ்சமரில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்தியது இந்துக் கல்லூரி கொழும்பு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

கொழும்பு பி.சரவணமுத்து சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் (14/03/2026) நிறைவடைந்த 15-ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்துக் கல்லூரி கொழும்பு அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் 4-4 என்ற ஆட்டங்கள் கணக்கில் சமநிலை அடைந்துள்ளது. தனது 75-ஆவது ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் இந்துக் கல்லூரி கொழும்புக்கு இந்த வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி கொழும்பு தனது முதல் இன்னிங்ஸில் 119 ஓட்டங்களைப் பெற்று முன்னிலை வகித்தது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, எதிரணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 82 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்துக் கல்லூரி கொழும்பு, 5 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தன்வசமாக்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திவாகரன் யாதவ் மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 120 பந்துகளை எதிர்கொண்டு 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
அவருக்குப் பக்கபலமாக வேலாந்துரை அபிநேஷ் 22 ஓட்டங்களையும், ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் இந்துக் கல்லூரி கொழும்பு அணியின் சுபர்ணன் மற்றும் யுவராஜ் ஆகியோர் முறையே 6 மற்றும் 5 விக்கெட்டுகளைக் குவித்து எதிரணியைச் திணறடித்தனர். போட்டியின் நாயகனாக திவாகரன் யாதவ் தெரிவு செய்யப்பட்டதோடு, சிறந்த துடுப்பாட்ட வீரராக சுதர்சன் சுபர்ணன், சிறந்த பந்துவீச்சாளராக விஸ்வநாதன் யுவராஜ் மற்றும் சிறந்த களத்தடுப்பாளராக கனகராஜ் நித்தீஸ் ஆகியோர் விருதுகளை வென்றனர். பவள விழா ஆண்டில் ஈட்டிய இந்த வெற்றி இந்துக் கல்லூரி கொழும்பு மாணவர்களிடமும் பழைய மாணவர்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


