ரஷ்யாவிடமிருந்து அவசரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அமைச்சர் விஜித பேச்சுவார்த்தை ஆரம்பம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) அவர்களுக்கும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தீர்வாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யத் தூதுவருடன் வெளிநாட்டு விவகார அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார்.
இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதற்குத் தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இலங்கைக்குத் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு எப்போதும் கிடைக்கும் என இந்தச் சந்திப்பின் போது தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

