நடிகர் ரஜனி ஏன் அரசியலுக்கு வரவில்லை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து
Meiveli Media Team

தமிழகத்தில் ஆளும் கட்சியின் மிரட்டல்களுக்குப் பயந்து பல தலைவர்கள் தங்கள் கொள்கையிலிருந்து பின்வாங்கிய நிலையில், எதற்கும் அஞ்சாத உறுதியான தலைவராக விஜய் திகழ்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதவ் அர்ஜுனா பேசியபோது; எம்.ஜி.ஆருக்குப் பின் ஒரு செல்வாக்குமிக்க தலைவராக உருவாக வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பினார். ‘சிஸ்டத்தை’ மாற்ற வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஆனால், தி.மு.க. தரப்பில் கொடுக்கப்பட்ட மிரட்டல்களால் அவரால் அரசியலுக்குள் வர முடியவில்லை. இறுதியில், அதே தரப்பின் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் படத்திலேயே நடிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதுவே அந்த மிரட்டல்களின் விளைவு என்றார். தமிழக அரசியல் மாற்றத்தைக் கோரிய பிற தலைவர்களின் இன்றைய நிலை குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்: தி.மு.க.-வை கடுமையாக எதிர்த்த வைகோ, இன்று அக்கட்சியின் கூட்டணியிலேயே இருந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளார். தி.மு.க.-வை ஒருகாலத்தில் விமர்சித்த திருமாவளவன், தற்போது அதே கூட்டணியில் நீடிக்கிறார். கட்சி தொடங்கி பெரும் மாற்றத்தைப் பேசுவதாகக் கூறி, டி.வி.-களை உடைத்த கமல்ஹாசன், இறுதியில் தி.மு.க. கூட்டணிக்குச் சென்று ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தி.மு.க.-வின் ஆதரவை நாடியுள்ளார். மேலும் அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது தங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட விமர்சனமும் கிடையாது என்று தெளிவுப்படுத்தினார்

