ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாக்கவென எதிர்கட்சிகளால் புதிய கூட்டணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

Meiveli Media Team

ஐக்கிய தேசியக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய குடியரசு முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுறு ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன. இவர்களால் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, புதிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த ஜீ.எல்.பீரிஸ்,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் மேற்கொண்ட வழக்கு, எதிர்க்கட்சிகளால் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒவ்வொருவரும் கருத்துக்களை முன்வைத்ததுடன் ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு எதிராக தாம் ஒன்றாக இருந்து போராடுவோம் என்றனர்.