அரசாங்கம் எரிபொருள் இருப்பு தொடர்பில் மக்களை ஏமாற்றுகிறது: ஆனந்த பாலித்த கடும் குற்றச்சாட்டு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் கூட்டணி தொழிற்சங்க முன்னணியின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த, நாட்டில் தற்போதைய எரிபொருள் இருப்பு மற்றும் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் மற்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முன்வைக்கும் தரவுகள் முற்றிலும் பரஸ்பர விரோதமானவை எனத் தெரிவித்தார். இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டி.எஸ். ராஜகருண அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, நாட்டில் எரிபொருள் இருப்பு முடிவடைந்துள்ளதாகவும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஒரு எரிபொருள் கப்பல் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். எனினும், மார்ச் முதலாம் திகதி எந்தவொரு எரிபொருள் கப்பலும் இலங்கைக்கு வரவில்லை என்பதை தான் நிரூபிக்கத் தயார் என்றும், தனது கூற்று தவறெனில் தமக்கு எந்தத் தண்டனையையும் வழங்கலாம் என்றும் ஆனந்த பாலித்த சவால் விடுத்தார்.
அதேநேரம், கூட்டுத்தாபனத் தலைவரும் ஊடக அமைச்சரும் முன்வைத்த தகவல்கள் பொய்யானது எனத் தான் உறுதிப்படுத்தினால், அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எரிபொருள் இருப்புத் தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த தரவுகளுக்கும் கூட்டுத்தாபனத் தலைவர் முன்வைக்கும் தரவுகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி டீசல் 33 நாட்களுக்கும் பெட்ரோல் 27 நாட்களுக்கும் உள்ளதாகக் கூறினாலும், கூட்டுத்தாபனத் தலைவர் டீசல் 35 நாட்களுக்கும் பெட்ரோல் 37 நாட்களுக்கும் உள்ளதாகக் கூறுவது மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
முந்தைய விலையில் கொள்வனவு செய்யப்பட்ட பழைய எரிபொருள் இருப்புகள் நாட்டிற்குள் இருக்கும் நிலையில், உலகச் சந்தையில் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி அரசாங்கம் மக்களைச் சுரண்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். கொழும்பு துறைமுகத்திற்கு 157 ரூபாவிற்கு வரும் ஒரு லீட்டர் எரிபொருளுக்கு அரசாங்கம் மக்களிடம் 317 ரூபாயை வசூலிப்பதாகவும், ஒரு லீட்டருக்கு 150 ரூபாவிற்கும் அதிகமான லாபத்தை அரசாங்கம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் போர் பதற்றங்கள் நிலவும் சூழலில், முறையான முன்கணிப்புடன் பிப்ரவரி மாதத்திலேயே எரிபொருள் இருப்புகளை அரசாங்கம் சேமித்திருக்க வேண்டும் என்றும், மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியிருந்தால் எரிபொருள் வரிசைகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். மேலும், நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் 13,000க்கும் அதிகமான மின்சாரத் தடைகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க உலகச் சந்தையின் விலைகளைக் காரணம் காட்டுவதாகச் சாடினார்.
மன்னார் படுகையில் உள்ள எண்ணெய் வளங்களை அகழ்வதற்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்குப் பயந்து தற்போதைய அரசாங்கம் தயங்குவதாகவும், நாட்டின் வளங்களைப் பயன்படுத்தத் தெரியாத ஒரு நிர்வாகத்தையே ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எந்தவொரு தடையையும் பொருட்படுத்தாமல், மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

