கூட்டணியில் சேர்க்க மீண்டும் மிரட்டும் பாஜக: 234 தொகுதிக்கும் வேட்பாளர் தேர்வை தொடங்கும் விஜய்
Meiveli Media Team

சென்னை: நடிகர் விஜய்யை கூட்டணியில் சேர்க்க பாஜ மீண்டும் தனது மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் நகரங்களில் அதிமுகவை விட அதிக ஓட்டுக்கள் பெறுவோம் என்று கருத்துக் கணிப்புகள் தெரியவந்ததால், 234 தொகுதிக்கும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணியை அவர் இன்று முதல் தொடங்குகிறார். இதனால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய 4 அணிகள் போட்டியிடுகின்றன. அதில், தவெக புதிய கட்சியாக தேர்தலில் களம் காண்கிறது. இதனால் அந்தக் கட்சியின் பலம் மற்றும் பலவீனம் வெளியில் தெரியவில்லை. ஆனால், நகரங்களில் அதிமுக கூட்டணியை விட தவெக அதிகமாக வாக்குகளைப் பெறும் என்றும் பல இடங்களில் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெகவை எப்படியாவது தங்கள் அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினர். ஆனால் நடிகர் விஜயோ, தனது தலைமையில் தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தார். அதிமுக, பாஜக அணியில் 3வது கட்சியாக சேர அவர் விரும்பவில்லை. பல இடங்களில் அதிமுக அணியை விட அதிக வாக்குகள் பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரியவந்ததால், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். கொள்கைக்காக தனித்துப் போட்டியிட்டு நகரங்களில் 2வது இடம் அல்லது வெற்றியை பெற்று தமிழகத்தில் தனித்துவமான கட்சியாக இருப்பதே எதிர்காலத்துக்கு சிறந்தது என்று விஜய் முடிவெடுத்துள்ளதாகவும், அந்த திட்டத்தையே அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் விடாமுயற்சியாக பாஜக தனது மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. நடிகர் விஜய்யோ, இன்று முதல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை தொடங்குகிறார். ஆர்வம் உள்ள, செல்வாக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அவர் பல தொகுதிகளுக்கு அடையாளம் கண்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய படையுடன் அவர் தேர்தலில் களம் காணுவார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

