எனக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட்டால் மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும்: சுப்ரமணியன் சுவாமி

Meiveli Media Team

 எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டால் மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை கூறியுள்ளார். வரி விதிப்பின் மூலம் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக அது மாறியிருக்கும் எனவும் டிரம்ப் கூறியிருந்தார். இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியதற்கு ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக சுப்ரமணிய சுவாமி எக்ஸ் தளத்தில் , ‘இந்தியாவின் 3-வது முறையாக பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த தகவல்களை தற்போதுவரை நான் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு செய்தால் அது மோடியின் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும், என்று கூறியுள்ளார்.