கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி : துரைராசா ரவிகரன் கடிதம்

Meiveli Media Team

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருக்கும் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.