ஊழல் தடுப்புப் பிரிவினரால் சஜின் வாஸ் குணவர்தன கைது
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார். அரசாங்கப் பதவியில் இருந்த காலப்பகுதியில் வருமானத்திற்கு மேலதிகமாகச் சொத்து சேர்த்தமை மற்றும் முறையற்ற நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆஜராகியிருந்த நிலையில், அங்கிருந்த அதிகாரிகளால் அவரிடம் நீண்ட நேரமாகத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் முடிவில், போதிய ஆதாரங்கள் காணப்பட்டதையடுத்து அவர் அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றில் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான பல்வேறு புகார்கள் குறித்து அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


