ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பு தேவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ‘பாலஸ்தீனத்தின் நண்பர்கள்’ (Friends of Free Palestine) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், “ஈரானுக்கு கை வைக்காதே!”, “எண்ணெய்க்காக இரத்தத்தை ஓட்டாதே!”, “அமெரிக்க – இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்து” மற்றும் “ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போரைத் தவிர்” போன்ற கோஷங்களை முன்வைத்தனர். குறிப்பாக “சியோனிசமற்ற உலகம் – அமைதியான உலகிற்கு வழிவகுக்கும்” என்ற வாசகம் அடங்கிய அட்டைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தலைவர்களின் செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் போர் நடவடிக்கைகளைத் தவிர்த்து, இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார். இப்போராட்டம் காரணமாக தேவட்டகா பள்ளிவாசலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

