மத்திய கிழக்கு மோதல் இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரிய அச்சுறுத்தலல்ல: பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழலானது இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரியளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 6 சதவீதமே மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செய்யப்படுவதால், இந்த மோதல்களின் ஆரம்ப சில மாதங்களில் ஏற்றுமதியில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ள போதிலும், அது பாரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலையே ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், தேயிலை தொடர்பான தொழில்துறையில் சில சவால்கள் எழக்கூடும் என்றாலும், இது சர்வதேச ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்பதால் இந்த மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய பொருளாதாரம் அஸ்திரமடையும் பட்சத்தில் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள போதிலும், கடந்த காலங்களில் கட்டியெழுப்பப்பட்ட வலுவான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பலமான திறைசேரி காரணமாக இவ்வாறான சவால்களைத் தாங்கிக்கொள்ளும் சக்தி நாட்டுக்கு இருப்பதாக பிரதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், கப்பல் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் இடம்பெறுவதால் அவை நாட்டின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமையாது என்றும், அண்டை நாடு என்ற வகையில் உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பை இலங்கை சரியாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளால் சர்வதேச ரீதியில் எவ்வித அழுத்தங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்கா போன்ற நாடுகளின் ஜனாதிபதிகள் எடுக்கும் தனிப்பட்ட தீர்மானங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியவர்கள் குறித்துப் பேசுவதற்கு எதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.
இக்கட்டான இந்தச் சூழலைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் பொய்யான பிரசாரங்கள் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது மேலும் சாடினார்.

