சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அமைச்சின் விசேட அறிவிப்பு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

உலகில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத பயண வழிகளைப் பயன்படுத்தவோ அல்லது அறிமுகமில்லாத வலயங்களுக்குள் நுழைவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தினார். மீனவ மக்களின் உயிர் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எப்போதும் தமது வழமையான மற்றும் அனுமதிக்கப்பட்ட பயண வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் உறுதியாகக் கேட்டுக்கொண்டார்.
கடலில் ஏதேனும் ஆபத்தான நிலைமையோ அல்லது அவசர நிலையோ ஏற்பட்டால், 24 மணி நேரமும் செயற்படும் MRCC நிலையத்துடன் அல்லது கடற்றொழில் திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்புடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அமைச்சர் அனைத்து மீனவர்களையும் படகு உரிமையாளர்களையும் கேட்டுக்கொள்கின்றார்.
இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. அஜித் கிஹான் அவர்களும் கலந்துகொண்டார்.

