இலங்கையை ஒரு ‘சுண்டு’ என விளிப்பது நாட்டுக்குச் செய்யும் பாரிய அவமதிப்பு – முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சாடல்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் வரலாற்றில் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தாய்நாட்டைப் பற்றிப் பெருமையுடனேயே பேசி வந்துள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இலங்கையை ஒரு “சுண்டு” (மிகச்சிறிய அளவு) எனக் குறிப்பிட்டமையானது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நாட்டுக்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமதிப்பாகும் என முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியின் இக்கூற்றை தாம் வன்மையாகக் கண்டிப்பதோடு அருவருப்புடன் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் அமைச்சர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் கூறி வந்தாலும், தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஈஸ்டர் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்னர் இந்தியா வழங்கியிருந்த போதிலும், தற்போது நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, புலனாய்வுப் பிரிவுத் தலைவராக இருந்த சலே போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்ராஹிம் போன்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச புலனாய்வு அறிக்கைகள் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் பற்றித் தெளிவுபடுத்தியுள்ள போதிலும், தற்போதைய அரசாங்கம் கர்தினால் அவர்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சி குறித்துப் பேசிய முன்னாள் ஆளுநர், “அனைவருக்கும் சமமான சட்டம்” என்பது இந்த ஆட்சியில் வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளதாகச் சாடினார். தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தரமற்ற நிலக்கரி மற்றும் உர ஊழல்களில் தொடர்புடைய அமைச்சர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அரசாங்கம் பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பதாகவும், ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமும் எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், மத்திய கிழக்கில் உள்ள பத்து இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அக்கறையற்று இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தற்போதைய போர்ச் சூழலில் இந்தியா தனது நாட்டுத் தொழிலாளர்களை விசேட விமானங்கள் மூலம் மீட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் அது குறித்து எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில், கொவிட் பெருந்தொற்றின் போது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களில் 3,000 பேருக்கு மட்டுமே சிறு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், அரசாங்கம் அறிவித்த 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி இன்னும் பெருமளவிலான மக்களைச் சென்றடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் எதுவும் தரைமட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும், கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாட்டின் அனைத்துக் கட்டமைப்புகளும் சீர்குலைந்துள்ளதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதன்போது மேலும் தெரிவித்தார்.