கொழும்பில் “ஸம் ஸம் அறக்கட்டளையின்” இப்தார் பெருவிழா: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விசேட நிகழ்வு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

ஸம் ஸம் அறக்கட்டளையினால் (Zam Zam Foundation) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு, இம்முறை சர்வமதத் தலைவர்கள் மற்றும் சகோதர இன மக்களின் பங்கேற்புடன் 2026 பிப்ரவரி 03 அன்று மாலை வெள்ளவத்தை மெரின் கிராண்ட் (Marine Grand) மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
”ஒளி மற்றும் சகோதரத்துவம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கலி பல்தசார் (Vraie Cally Balthazaar) மற்றும் கலாநிதி வின்யா ஆரியரத்ன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் நோக்கம் குறித்து உரையாற்றிய ஸம் ஸம் அறக்கட்டளையின் தலைவர் முஃப்தி யூசுப் ஹனீபா, “பல்வேறு இனங்களைச் சேர்ந்த சகோதர பிரஜைகளாக நாம் ஒருவருக்கொருவர் மதிப்பளித்துச் செயல்படுவதன் மூலமே சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்” எனச் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாம் மார்க்கமானது மூன்று பிரதான அம்சங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மார்க்கக் கடமைகளை எவர் மீதும் திணிப்பது இஸ்லாமிய போதனைகளில் இல்லை எனவும் தெரிவித்தார். ஒவ்வொருவரும் தமது மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் மதிப்பளிப்பதற்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்றும், எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தக் கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கலி பல்தசார், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கு மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் சகவாழ்வும் மிக அவசியமானவை எனத் தெரிவித்தார்.
பல வருடங்களாக இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் ஸம் ஸம் அறக்கட்டளை, இஸ்லாம் குறித்து நிலவும் தவறான புரிதல்களை நீக்கி சரியான தெளிவைப் பெறுவதற்காக, எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் இலவசமாகப் பயிலக்கூடிய ‘அடிப்படை இஸ்லாமிய கற்கை நெறியை’ நடாத்தி வருகின்றது.
தற்போது இந்த கற்கை நெறியின் ஆறாவது தொகுதி மாணவர்கள் பயின்று வருவதுடன், இம்முறை இப்தார் நிகழ்வில் முன்னைய தொகுதிகளில் பயின்ற பல்வேறு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமானோரும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

