இலங்கையில் ஒரே பாலினத்தவரை ஊக்குவிக்கும் சுற்றுலாத்துறை நடவடிக்கைக்கு தடை
Meiveli Media Team

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த வழக்கில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எடுத்துள்ள முக்கிய கொள்கை முடிவு இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அல்லது மேம்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ‘தேச ஹிதைஷி தேசிய இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டாரவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இத்தகைய சுற்றுலாத் திட்டங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு முரணானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. அதிகாரசபை இத்தகைய திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை எனத் தற்போது கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதால், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பரிசீலித்து வருகிறது.

