இலங்கைக்கு அருகே ஈரானியப் போர்க்கப்பலை ஏவுகணை மூலம் மூழ்கடித்தது அமெரிக்கா: பாதுகாப்புச் செயலாளர் உறுதி

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும், அமெரிக்காவின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு ‘மார்க் 48’ ரக ஏவுகணை (Torpedo) மூலம் குறித்த கப்பல் வெற்றிகரமாக மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை எனச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவின் உலகளாவிய பாதுகாப்பு எல்லையை இது பறைசாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
​இந்தத் தாக்குதல் இடம்பெற்ற போது ஈரானியப் போர்க்கப்பலில் சுமார் 180 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில், கப்பலில் இருந்து பெறப்பட்ட ஆபத்து கால சமிக்ஞையை அடுத்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தன. இந்த மீட்பு நடவடிக்கையின் போது இதுவரை 32 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், சுமார் 80 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தாக்குதலின் தீவிரத்தை விளக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கடலில் இருந்து பெறப்பட்ட வீடியோக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஆசியக் கடற்பரப்பில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பிராந்திய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.