வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசிமகப் பஞ்சரத பவனி இன்று கோலாகலம்!

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசி மகோற்சவத்தின் சிகர நிகழ்வான பஞ்சரத பவனி இன்று (02.03.2026) திங்கட்கிழமை பக்திப் பெருக்கோடு நடைபெறுகின்றது. இன்றைய தினம் அதிகாலை 1.00 மணியளவில் உதயகால பூஜையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானதுடன், மூலஸ்தான அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகம் என்பன ஆகம விதிகளுக்கமைய மிகவும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து காலை 8.00 மணியளவில் இரதோற்சவ வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீ முத்து மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர், ஸ்ரீ முத்துமாரியம்பாள் மற்றும் ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய ஐந்து மூர்த்திகளும் சர்வ அலங்கார பூஷிதர்களாகவும், அதிவிசேட அலங்காரத்துடனும் எழுந்தருளினர்.

தேவர்களினால் சாத்தப்படும் பிரத்யேக ரோஜா மலர் மாலைகளை அணிந்து, இராஜகோபுர வீதி வழியாக ஐந்து தேர்களிலும் மூர்த்திகள் ஆரோகணித்து, பிரதான வீதி வழியாக வீதி உலா வரத் தொடங்கியுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, பக்தி கோஷங்களுக்கு மத்தியில் நகர் வலம் வரும் இந்த பஞ்சரதங்கள், இன்று இரவு முழுவதும் வீதி உலா வந்து, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 1.00 மணியளவில் இராஜ வீதி வழியாக மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடையவுள்ளன.

அம்மன் இருப்பிடம் வந்து சேர்ந்தவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சைசாத்துதல் வைபவம் மிக விமரிசையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்மீகப் பெருவிழாவைக் காண்பதற்காக நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் மாத்தளை நகரில் குழுமியுள்ளனர்.