கொலன்னாவை எரிபொருள் முனையத்தின் தற்போதைய விநியோக நிலைமை மற்றும் கையிருப்பு விபரங்கள்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ள நிலையில், கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல ஆகிய எரிபொருள் முனையங்கள் இன்று (2026 மார்ச் 02) விடுமுறை தினத்திலும் முழுநேர விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. நிலவும் அதிக கேள்வியைச் சமாளிக்கும் வகையில், கொலன்னாவை முனையத்தில் மேலதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
​இன்று காலை 9:44 மணி வரையான காலப்பகுதிக்குள் மட்டும் சுமார் 5.2 மில்லியன் லிட்டர் எரிபொருள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் 2,325,349 லிட்டர் டீசலும், 2,904,000 லிட்டர் பெட்ரோலும் அடங்குவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எரிபொருள் நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளைக் கட்டுப்படுத்தவும், கறுப்புச் சந்தையில் எரிபொருள் விற்கப்படுவதைத் தடுக்கவும் கேன்கள் மற்றும் போத்தல்களில் எரிபொருள் வழங்குவதற்கு உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
​தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள அதிகாரிகள், நாட்டில் பெட்ரோல் 37 நாட்களுக்கும், டீசல் 35 நாட்களுக்கும், சூப்பர் டீசல் 72 நாட்களுக்கும் மற்றும் விமான எரிபொருள் 47 நாட்களுக்கும் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் இறக்குமதி ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதால், சர்வதேச அரசியல் சூழலினால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
​எரிபொருள் விநியோகம் நாளை செவ்வாய்க்கிழமைக்குள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் எனவும், அமைதியைப் பேணுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரும் இராணுவத்தினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.