எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அவசர அறிவிப்பு

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் கையிருப்பு நிலைவரம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டி எஸ். ராஜகருணா விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், எனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
​தற்போது நாட்டுக்குத் தேவையான அனைத்து வகையான எரிபொருட்களும் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விநியோக நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகப் பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பி, எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
​மேலும், பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இவ்வாறான செயற்பாடுகள் தேவையற்ற பதற்றத்தையும் செயற்கையான தட்டுப்பாட்டையும் உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

வழமை போன்று தமக்குத் தேவையான அளவு எரிபொருளை மட்டும் பெற்றுக்கொள்ளுமாறும், விநியோகச் சங்கிலியைச் சீராகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டி.எஸ். ராஜகருணா இந்த ஊடக அறிக்கையின் ஊடாக மேலதிகமாகத் தெரிவித்துள்ளார்.