கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகலமாக ஆரம்பம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடற்பரப்பில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இன்று மாலை நடைபெற்ற விசேட வழிபாடுகள் மற்றும் கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான திருவிழா நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வான மகாத் திருவிழா கூட்டுத் திருப்பலி நாளை, அதாவது 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இந்த வருடாந்தப் பெருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படகுகள் மூலமாக கச்சத்தீவை நோக்கி வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
இரு நாட்டு மீனவர்களினதும் நம்பிக்கைக்குரிய புனித தளமாகவும், அவர்களின் ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழும் கச்சத்தீவு ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு, குடிநீர், தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் இலங்கை கடற்படையினர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் இணைந்து முன்னெடுத்துள்ளன.
கடல் மார்க்கமாகப் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட ரோந்துப் பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

