தரமற்ற நிலக்கரி நட்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது; முறையான ‘தடயவியல் கணக்காய்வு’ அவசியம்: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள தரமற்ற நிலக்கரி காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய நிதி இழப்புகளை மின்கட்டண அதிகரிப்பு ஊடாக மக்கள் மீது சுமத்துவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்த விசேட நிபுணர் குழுக்களை நியமிக்காது, முறையான தடயவியல் கணக்காய்வை (Forensic Audit) முன்னெடுத்து இந்த ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கல்களை ஆராய வேண்டும் என்று அவர் இன்று (26) விசேட கூற்றொன்றை முன்வைத்து வலியுறுத்தினார்.

​தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் இப்போது அந்த நிலக்கரி தரமற்றது என்பதை மக்கள் முன் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தத் தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் மின் உற்பத்தி நிலையத்தின் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளதுடன், வெளியேறும் சாம்பல் அளவு 11–15% என்ற மட்டத்திலிருந்து 21% வரை இருமடங்காக அதிகரித்துள்ளது.

இது சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உற்பத்தித் திறன் குறைவினால் மின்சாரத் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய அதிக விலையுடைய எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டியுள்ளது. இதனால் நாட்டிற்கும் மின் நுகர்வோருக்கும் பாரிய பண நட்டம் ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
​2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் 30 ஆவது பிரிவின்படி, வினைத்திறனான மின்உற்பத்தி மூலம் மட்டுமே மின்சார நுகர்வோரிடம் கட்டணம் அறவிட முடியும். எனவே, இந்தத் தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டகரமான மின்உற்பத்தி செலவை நாட்டின் சுமார் 75 இலட்சம் மின் நுகர்வோரிடம் இருந்து அறவிட அரசாங்கத்திற்கோ அல்லது பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கோ எந்த வகையிலும் அதிகாரம் இல்லை.

முறைமையில் மாற்றம் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த தற்போதைய அரசாங்கம், இன்று ஊழல் நிறைந்த தரமற்ற நிலக்கரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டையும் மக்களையும் ஏமாற்றியுள்ளது.
​இந்த ஊழலால் இழந்த பணத்தைக் கொண்டு பாடசாலைகள், வைத்தியசாலைகளை நிர்மாணித்திருக்க முடியும் அல்லது வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும் எனத் தெரிவித்த அவர், அரச சொத்தான நுரைச்சோலை மின் நிலையத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கும் நட்டத்திற்கும் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், மின்சார நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்னிற்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.