சட்டத்தின் முன் அனைவரும் சமம்; பின்னணிகள் எதனையும் கருத்திற் கொள்ளாது விசாரணை நடத்தப்பட வேண்டும் – அருட்தந்தை சிறில் காமிணி

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கொழும்பு மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமிணி அவர்கள் முக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் தாங்கள் மிகுந்த பொறுமையுடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், மக்கள் அனைவரும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக, அண்மைக்கால கைது நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களிலும் ஏனைய தளங்களிலும் முன்வைக்கப்படும் தவறான நிலைப்பாடுகளை அவர் வன்மையாக நிராகரித்துள்ளார். ஒருவர் கடந்த காலத்தில் ராணுவ வீரராக இருந்தவர் என்பதாலோ அல்லது போரில் பங்காற்றியவர் என்பதாலோ, அவர் மீதான சட்ட ரீதியான விசாரணைகளைத் தவறு எனச் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், சட்டத்திற்கு மேலாக எவரும் இருக்க முடியாது என்பதே சட்டத்தின் மேலாதிக்கம் (Rule of Law) என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஒரு நபர் கடந்த காலத்தில் செய்த நல்ல காரியங்கள் அல்லது அவருடைய பதவி நிலைகள், அவர் செய்திருக்கக்கூடிய தவறுகள் தொடர்பான விசாரணைகளில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

விசாரணை என்பது சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நடைமுறை என்றும், அதன் முடிவில் ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திடமே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இத்தகைய விசாரணைகளுக்குத் தடையாக இருக்காமல், சட்டத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அருட்தந்தை சிறில் காமிணி அவர்கள் தனது உரையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.