இலங்கைத் திரைத்துறையில் புதிய மைல்கல்லாக உருவாகும் “அந்தோனி”: மார்ச் 13ம் திகதி 2026 இல் உலகளாவிய திரையரங்க வெளியீடு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கைத் தமிழ்த் திரைத்துறையை சர்வதேச தரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பாரிய முயற்சியாக, முற்றிலும் உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய, தென்னிந்தியக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள “அந்தோனி” (Anthony) திரைப்படத்தின் விசேட ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் எழில்மிகு கடற்கரைப் பின்னணியில் ஒரு மீனவனின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒரு காதல் மற்றும் த்ரில்லர் பாணியிலான கதைக் களத்தைக் கொண்டுள்ளது.
தனது மனைவியுடன் அமைதியான வாழ்க்கையைத் தேடும் அந்தோனி என்ற மீனவனின் வாழ்வை, வேறொரு மீனவரால் ஏற்படும் சவால்கள் எவ்விதம் மாற்றியமைக்கிறது என்பதை இப்படம் உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கிறது. ‘ஓசை பிலிம்ஸ்’ (Osai Films) தயாரிப்பு நிறுவனத்தின் கலைவளரி சக ரமணதாஸ் சத்தியநாதன் மற்றும் சுகந்தினி ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பது இலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ‘கயல்’ வின்சன்ட் கதாநாயகனாக நடிக்க, டி.ஜே. பானு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன் ரவீந்திரன் மற்றும் சௌமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஊடக சந்திப்பில் பேசிய படக்குழுவினர், இலங்கைத் தமிழ் சினிமாவை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் வணிக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தமது நோக்கம் எனத் தெரிவித்தனர்.
குறிப்பாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் நிலப்பரப்புகளை மிக அழகாகப் பதிவு செய்துள்ளதாகவும், கடினமான சூழல்களிலும் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ் மொழியில் பிரதானமாக உருவாகியுள்ள “அந்தோனி” திரைப்படம், அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மலையாளம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

