மரிக்கார் கணக்கு பார்த்தது வீட்டில் உள்ள அடுப்பிலா? – நிருக்ஷ குமார கேள்வி
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் நிலக்கரி தரம் மற்றும் அதன் விலை நிர்ணயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வெளியிட்ட கருத்துக்களை ‘புதிய ஜனநாயக முன்னணியின்’ அமைப்பாளர் நிருக்ஷ குமார கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், இலங்கையிலோ அல்லது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையப் பகுதியிலோ நிலக்கரியின் தரம் மற்றும் அதன் விலை குறித்து இவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்யக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எவ்வாறு மில்லியன் கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிட்டார் என வினவியதுடன், அவர் தனது வீட்டில் உள்ள அடுப்பில் நிலக்கரியைப் போட்டு எரித்துப் பார்த்துவிட்டு இந்த முடிவுக்கு வந்தாரா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
சஜித் பிரேமதாசவைச் சுற்றி இருப்பவர்கள் மக்களை ஏமாற்றும் குழுவினர் எனச் சாடிய அவர், தமது அரசியல் திவால்நிலையை மறைப்பதற்காகவே இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த காலங்களில் மின்சக்தி அமைச்சர்களாக இருந்தவர்கள் உண்மை நிலையை நன்கு அறிந்திருந்தும், தற்போது அரசியல் காரணங்களுக்காக மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக நிருக்ஷ குமார மேலும் குற்றஞ்சாட்டினார்.

