பௌத்த பிக்குகள் மீதான அவதூறுகளை நிறுத்த அரசுக்கு பொதுபல சேனா கடும் எச்சரிக்கை

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் முன்னெடுத்து வரும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபல சேனா அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இன்றைய தினம் (23) இராஜகிரியவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை என்றும் தெரிவித்தார்.

சோழர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற பலத்த ஆக்கிரமிப்பாளர்களால் கூட சிங்கள பிக்குகளின் வரலாற்றையோ அல்லது அவர்களின் செல்வாக்கையோ சிதைக்க முடியவில்லை என்பதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிக்குகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் சாடினார். தற்போதைய அரசாங்கம் மாத்திரமன்றி, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களின் காலத்திலும் பிக்குகளின் அரசியல் பங்களிப்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
தமது உரிமைகள் மற்றும் வரலாற்று ரீதியான வகிபாகத்தை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரின் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹன்சாட் (Hansard) அறிக்கைகளின் முக்கிய பகுதிகளை அவர் இதன்போது சான்றாக முன்வைத்தார்.

தமக்கு எதிராகப் பாரியளவில் அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாகத் தமக்குள்ள அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் உண்மைத் தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
“எம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி எமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்த வேண்டும். எம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், அதை விடுத்து இழிவான முறையில் அவதூறு பேசாதீர்கள்” என அவர் சவால் விடுத்தார்.

மேலும், தமக்கெதிரான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தற்போது தாம் தங்கியிருக்கும் விகாரையைப் புனரமைப்பதற்கும் போதிய நிதி வசதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக “ஜாதிக பின்கெட” (தேசிய புண்ணியத் தராசு) எனும் பெயரில் வங்கி கணக்கொன்றை அறிமுகப்படுத்தினார். விருப்பமுள்ளவர்கள் 100 ரூபாவையேனும் அந்த கணக்கில் வைப்பிலிட்டு இந்த நீதிப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.