வட மாகாண இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள்: விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (19/02/2026) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வெத்தன்சிங்கன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படவுள்ள துரித வளர்ச்சிக்குத் தேவையான மனித வளத்தைத் தயார் செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பாடசாலை மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த ன
கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான தெளிவை வழங்குவதே பிரதான நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் விமானப் போக்குவரத்து சங்கங்களை நிறுவுதல், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், விமான நிலையச் செயற்பாடுகள் குறித்த களப்பயணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள், சமூகத்தில் பலருக்கு விமானப் பொறியியலாளராகவோ அல்லது விமானியாகவோ வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை குறித்து போதிய தெளிவு இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தற்போது தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை விமானப் பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதிலும், அத்துறையில் போதிய ஆட்கள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, எமது இளைஞர் சமூகத்தை இலங்கைக்கு மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இத்துறை சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய தகுதியுள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு அவர்கள், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரவுகளின்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறை மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான தகுதியுள்ள நபர்களை உருவாக்க விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன அவர்கள் உரையாற்றுகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளால் சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக புதிய விமான நிறுவனங்கள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், வட மாகாணத்தில் இத்துறையை அபிவிருத்தி செய்ய முன்வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்ததுடன், வட மாகாணத்தில் உள்ள வளங்களை உச்சகட்டமாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


