பிக்குகள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சங்கச் சம்மேளனம் குறித்து அமைச்சர் லால் காந்த விளக்கம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

அண்மையில் பௌத்த மதகுருமார்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் நடைபெறவுள்ள மகா சங்கச் சம்மேளனம் தொடர்பில் அமைச்சர் கே.டி. லால் காந்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
பிக்குகள் மீதான தொடர்ச்சியான விமர்சனங்கள் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஒருவர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் வகையில் அல்லது விமர்சனங்களுக்கு இடமளிக்கும் வகையில் செயல்படும் பட்சத்தில், அவர் யாராக இருந்தாலும் அத்தகைய நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்தார்.
இது பிக்குகளுக்கும், பூசகர்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் மற்றும் அரசியல்வாதிகளான தங்களுக்கும் பொதுவான ஒரு தர்மம் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மகா சங்கத்தினர் மீண்டும் ஒரு சம்மேளனத்திற்காக ஒன்றுகூடுவது வரவேற்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்டார்.
இச்சம்மேளனத்திற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்ட போது, வீதியில் செல்லும் போது வாய்மொழியாக அழைப்பு விடுத்திருக்கக் கூடும் என்றும், எனினும் தனக்கு அது குறித்த உத்தியோகபூர்வ தகவல் தெரியாது என்றும் அவர் கூறினார். ஒருவேளை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அவர் அங்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கடந்த கால போராட்டங்களின் (அரகலய) போது சிறை சென்றவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இது நீதித்துறை மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களைக் கொண்ட ஒரு விரிவான கலந்துரையாடலுக்கு உரிய விடயம் எனத் தெரிவித்தார். போராட்டங்களின் போது நியாயம் தங்கள் பக்கம் இருந்தாலும், சட்டத்தின் முன் அவை தண்டனைக்குரியதாக மாறும்போது அவற்றை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தனது கடந்த கால அனுபவங்களை முன்வைத்து விளக்கமளித்தார்.
இறுதியில், நடைபெறவுள்ள சங்கச் சம்மேளனத்திற்கு தனது அமைச்சின் ஊடாக வழங்கக்கூடிய குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும், இதில் சுமார் 10,000 முதல் 15,000 வரையான பிக்குகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் லால் காந்த மேலும் தெரிவித்தார்.

