அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பு

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் (U.S. Pacific Fleet) தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களை இன்று (20) வெளிவிவகார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால அபிவிருத்திகள் குறித்து இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர்.
குறிப்பாக, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளை பிரதி அமைச்சர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

அமெரிக்க விமானப்படையின் 36வது அவசரக்கால பதிலளிப்பு குழுவின் ஊடாக, இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து வசதிகள் இலங்கையின் மீட்புப் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய அவசர நிலைகளை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு, சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், நான்கு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், அதிநவீன ‘பிளீட் பிராட்பேண்ட்’ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் TH-57 பயிற்சி ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். இதற்குப் பதிலளித்த அட்மிரல் கோஹ்லர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் நாளைய தினம் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

இறுதியாக, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்ளும் போது நாடுகளின் இறையாண்மையை மதிப்பதே மிக முக்கியமானது என்பது குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அட்மிரல் கோஹ்லர், 2024 ஏப்ரல் 4 அன்று அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றதுடன், அதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் தலைமைத்துவம் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.