சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ வழக்கு ஏப்ரல் 02 இல் விசாரணை: எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணுமாறு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) திட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவர்ணதுகொட முன்னிலையில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் பல பாகங்களிலும் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வுகளை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதற்கான உடனடி தீர்வாக, ஹம்பாந்தோட்டை துறைமுக பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்திலிருந்து (Gas Terminal) சந்தைக்கு எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

குறித்த முனையத்திலிருந்து தற்போது எரிவாயு மறு-ஏற்றுமதி (Re-export) மட்டுமே செய்யப்படுகின்ற போதிலும், தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு அந்தப் கொள்கையைத் தற்காலிகமாக மாற்றி உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயுவை விநியோகிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த காலங்களில் தமது அரசாங்கம் சரியான நேரத்தில் முறையான தீர்மானங்களை எடுக்காத காரணத்தினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் துரிதமாகச் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.