மத்திய அரசு மதிப்பதில்லை’ – சட்டமன்றத்தில் ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

Meiveli Media Team

 

அனைத்து அதிகாரங்களை வைத்துள்ள ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிப்பதில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உரையாற்றினார். அவர் மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் வலுப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக அரசமைப்பு சீர்திருத்தம் தேவை என்றும், தற்போதைய அரசமைப்பு மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். முதலமைச்சர் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட முயற்சிகளை ‘சதி’ என்று குறிப்பிட்டார். முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிப் பகிர்வில் குறைவாகவே ஒதுக்குவதாகவும்இ இது மாநில உரிமைகளை பறிப்பதாகவும் விமர்சித்தார். ‘மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்’ என்று அவர் கூறினார். மத்திய அரசு மாநில அரசுகளை ஒருபோதும் மதிப்பதில்லை என்றும், அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துக்கொண்டு ஏதேச்சதிகாரமாக செயல்படுவதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். ‘இன்னும் எத்தனை நாட்கள்தான் மத்திய அரசு கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருக்க வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பிய அவர், மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட ‘சதிகளை’ முறியடிக்க ஒரே தீர்வு மாநில சுயாட்சிதான் என்று முதலமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார். அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும் என்றும்இ தமிழ்நாடு இதற்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். தி.மு.க.வின் கொள்கை மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி என்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் நினைவூட்டினார். ஒட்டுமொத்தமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த உரை மத்திய அரசுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளுடன், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் தீவிரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. நிதிப் பகிர்வு, அதிகார பறிப்பு,தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களை முன்வைத்து மத்திய அரசின் ஏதேச்சதிகாரத்தை சாடியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த உரை தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பு உணர்வை தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.