கனிம வள ஆய்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை:அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

Meiveli Media Team

கனிம வள ஆய்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவினால் எந்தவொரு முன்மொழிவும் எமது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கனிம வளங்கள் குறித்து தேசிய கனிம வள கொள்கைக்கமையவே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  அது 2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும். எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அவ்வாறு எந்தவொரு ஒப்பந்த முன்மொழிவும் முன்வைக்கப்படவுமில்லை. அது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுமில்லை. இதுபோன்று பல்வேறு பழைய ஒப்பந்த முன்மொழிவுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் எமது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பால் உற்பத்தி தொடர்பில் இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. நாம் தேசிய கனிம வள கொள்கையொன்றை வகுத்திருக்கின்றோம். அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்துள்ளது. நாம் அதனை பின்பற்றி அதற்கமையவே கனிம வளங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்போம் என்றார்.