இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவு வைர விழா கொண்டாட்டங்கள் குறித்த விசேட அறிவிப்பு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கை விமானப்படையானது எதிர்வரும் 2026 மார்ச் 2ஆம் திகதி தனது 75வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல அகுரேகொடையிலுள்ள விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் விமானப்படை பிரதி தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஜிஹான் செனவிரத்ன, பெண் ஊடகப் பேச்சாளர் ஸ்குவாட்ரன் லீடர் இவோன் விதாரண மற்றும் விமானப்படை ஊடகப் பிரிவின் பதில் ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் சஞ்சீவ நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த விமானப்படை பிரதி தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஜிஹான் செனவிரத்ன, “வான்பரப்பினைப் பாதுகாப்போம்” என்ற குறிக்கோளுடன் கடந்த 75 ஆண்டுகளாகத் தாய்நாட்டிற்காக ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவைகளையும், வரவிருக்கும் வைர விழா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

1948இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு நிலவிய பாதுகாப்புத் தேவையின் நிமித்தம், அப்போதைய அரச தலைவர்களின் முயற்சியினால் 1951 மார்ச் 2ஆம் திகதி ராயல் சிலோன் விமானப்படை நிறுவப்பட்டது. இந்த வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தற்போதைய விமானப்படைத் தளபதியான எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல பிரம்மாண்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு அங்கமாக, 27வது விமானப்படை சைக்கிளோட்டப் போட்டி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போட்டியாளர்களின் பங்கேற்புடன் 2026 பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. இலங்கையில் சைக்கிளோட்ட விளையாட்டை ஊக்குவிப்பதையும் சர்வதேச தரத்திலான போட்டியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தப் பந்தயமானது, தேசிய சைக்கிளோட்ட சம்மேளனத்தின் விதிகளுக்கு அமைய நடத்தப்படவுள்ளது.
மேலும், மார்ச் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ரத்மலானை விமானப்படை தளத்தில் வான் சாகசங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட மாபெரும் கல்வி மற்றும் கண்காட்சி நிகழ்வு பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சிம்பொனி ஆஃப் விங்ஸ்” இசை நிகழ்ச்சி, விமானப்படை ஈகிள்ஸ் ராக் இசைக்குழு மற்றும் பிரபல பாடகர்களின் பங்கேற்புடன் மார்ச் 28ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு கொழும்பு நெலும் பொகுணவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளாக இலங்கை மக்களைப் பாதுகாத்து வரும் இலங்கை விமானப்படை, எதிர்காலத்திலும் தாய்நாட்டிற்கான தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றத் தயாராக உள்ளது என்பதை இந்த வைர விழா நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

