ஆற்றுப்படுத்தல்களை மட்டும் வழங்கிக்கொண்டிருந்தால் சமத்துவம் கிடைக்குமா? : வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி
Meiveli Media Team

சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பில் இந்த அரசாங்கம் அபிவிருத்தி சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் சிலவற்றை வழங்குவதை மறுப்பதற்கில்லை. அதற்காக மாறி வரும் ஒவ்வோர் அரசாங்கமும் ஆற்றுப்படுத்தல்களை மட்டும் வழங்கிக்கொண்டிருந்தால் எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள் எப்போது அடைவது? துறைதோறும் புரையோடிப்போயுள்ள சீரற்ற வளப்பரம்பலால் தொடர்ந்தும் வன்னி மண் வஞ்சிக்கப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் – நீக்குதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைக்குறிப்பிட்டார். நாடளாவிய வகையில் வடமாகாணம் புறக்கணிக்கப்படுவதையும் வடமாகாணத்திற்குள் வன்னிப்பெருநிலப்பரப்பு புறக்கணிக்கப்படுவதையும் மீள மீள சுட்டிக்காட்டுவதிலேயே எமது பெருங்காலம் கழிகிறது.வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரச கொள்கையின் அடிப்படையில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் சேவை பிரமாணக்குறிப்பு வலுப்பெறும் திகதி 2011.08.01 வரையான காலப்பகுதியில் பல்வேறு பதவிப்பெயர்களின் கீழ் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு தேசிய சம்பள மற்றும் ஊழியர் தொகை மதிப்பு ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் எம்ஏ-4-2006 சம்பள அளவுத்திட்டம் வழங்கப்பட்ட அலுவலர்கள் பின்னர் 2012.02.14ஆம் திகதிய 1745ஃ11 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சேவையில் உள்வாங்கப்பட்டனர். பின்னர் 2012.09.07 ஆம் திகதிய 1774ஃ31ஆம் இலக்க வர்த்தமானி மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பெயர் மாற்றம் பெற்றனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனும் அடையாளத்துடன் பணிபுரியும் இவ்வகுதியினருக்கு முறையான இடமாற்றக் கொள்கை ஏன் இன்றுவரை வகுக்கப்படவில்லை.5,6,7 ஆண்டுகள் கடந்தும் ஒரே சேவை நிலையத்தில் பணியாற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரின் பதில் என்ன? ஓர் ஊழியர் ஓரே சேவை நிலையத்தில் பத்தாண்டுகள் கடந்தும் சேவையாற்ற உங்கள் நிருவாக ஒழுங்கு இடமளிக்கிறதா? ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தில் மிகையாக இருப்பதை தங்கள் அமைச்சு இன்னமும் இனங்காணவில்லையா? வடமாகாணத்தில் மேற்படியான சமச்சீரற்ற வள ஒதுக்கம் தங்கள் அரசாங்கத்தில் சீராக்கப்படுமா என்பதை பாதிக்கப்படும் வன்னிப்பெருநிலத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற அமைச்சரிடம் வினவுகிறேன் என்றார்.

