“மக்கள் அபிலாஷைகளுக்குப் பொறுப்புக்கூறும் மக்கள் சக்தி”: கொழும்பில் விசேட ஊடக சந்திப்பு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

“மக்கள் அபிலாஷைகளுக்குப் பொறுப்புக்கூறும் மக்கள் சக்தி” எனும் கருப்பொருளின் கீழ் ‘ஜன பலய’ (மக்கள் சக்தி) அமைப்பின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு என்.எம். பெரேரா மையத்தில் நடைபெற்றது. இதில் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்து பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஜன பலய செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள மகா சங்க மாநாட்டை கடுமையாக விமர்சித்தார். குறித்த மாநாடு என்பது ஒரு சில பிக்குகளின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பௌத்த சாசனத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிக்கொண்டு, இனவாதம் மற்றும் மதவாதத்தைப் பரப்பும் பின்னணி கொண்ட ஒரு குழுவினரே இந்த மாநாட்டிற்குப் பின்னால் இருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் என்பது அமைதியான போராட்டத்தின் மீது ‘பொஹொட்டுவ’ குண்டர்கள் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சமூகக் கொந்தளிப்பின் விளைவு என குறிப்பிட்ட அவர், சட்டமா அதிபரின் செயற்பாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையா என்ற சந்தேகம் எழுவதாகவும், இது குறித்து அரசாங்கம் நியாயமாகச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி, அண்மைய கருத்துக்கணிப்புத் தரவுகளை முன்வைத்து ஜனாதிபதி மீதான மக்களின் நன்மதிப்பு அதிகரித்துள்ளதை விளக்கினார். ‘டிட்வா’ புயலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஜனாதிபதிக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு கிடைத்துள்ள அதேவேளை, அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளுக்கு 49 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக வட மாகாணத்தில் ஜனாதிபதிக்கு 86 சதவீத ஆதரவும், வடமேல் மாகாணத்தில் 97 சதவீத ஆதரவும் காணப்படுவதாகவும், இது கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரம் காணப்பட்ட செல்வாக்கு தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்க்கட்சிக்கான ஆதரவு 23 சதவீதமாகச் சரிவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மரண தண்டனை விவகாரத்தில் சட்ட ரீதியான முறையன்றி பழிவாங்கும் நோக்கில் தண்டனை வழங்குவதை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜன பலய கூட்டமைப்பின் கபில கிருஷ்ண, மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுக்கு அப்போதைய அரசாங்க ஆதரவாளர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார். அலரி மாளிகையிலிருந்து வந்த குண்டர்கள் ‘கோட்டா கோ கம’ மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாகவே நாடு முழுவதும் கலவரம் வெடித்ததாகவும், இது மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு என்றும் அவர் விவரித்தார். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களம் சில அரசியல் குழுக்களுக்கு சார்பாக வழக்குகளைக் கையாள்வதாகத் தென்படுவதாகவும், இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தமக்குச் சார்பாக உருவாக்கப்பட்ட ஊழல்மிக்க பிக்குகள் குழுவே தற்போது பௌத்தத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு மீண்டும் அரசியலில் ஈடுபட முனைவதாகவும், இவர்களிடம் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, நாடாளுமன்ற நேரலையின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியமை குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயற்பாடுகள் அவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட கபில கிருஷ்ண, பிரதமர் உள்ளிட்ட பெண்களை இலக்கு வைத்து அவர்கள் பேசிய விதம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். இவ்வாறான கீழ்த்தரமான எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இந்த ஊடக சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது.

