பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு
Meiveli Media Team

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்தினார்.
ஜனாதிபதி அலுவகத்தில் இன்று முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் தற்போதைய நிலையில் விஜயம் மேற்கொண்டமைக்காகப் பிரிட்டன் துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது பிரிட்டன் வழங்கிய ஒத்துழைப்புகளைப் பாராட்டினார். குறிப்பாக, இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்டிருந்த வரிச்சலுகைகளை நீக்கி, பிரிட்டன் வழங்கிய விசேட ஆதரவுக்கு ஜனாதிபதிதனது நன்றியைத் தெரிவித்தார்.இலங்கை தற்போது எட்டியுள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்து பிரிட்டன் துணைப் பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார். குறிப்பாக, வரி அறவீட்டுச் செயற்பாடுகள் உள்ளிட்ட புதிய பொருளாதாரத் திட்டங்களை அவர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.பசுமை வலுசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசு ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக டேவிட் லம்மி உறுதியளித்தார்.சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிக்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வேதனையான அனுபவங்கள் குறித்து பிரிட்டன் துணைப் பிரதமர் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.
இந்தச் சவால்களை முறியடித்து இலங்கை மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.


