தேசிய பெண்கள் ஆணைக்குழு செயலிழப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அரசாங்கத்தின் மீது சமிந்த்ராணி கிரியெல்ல கடும் விமர்சனம்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்த்ராணி கிரியெல்ல இன்று (16) அந்த கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.

பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழு தற்போது பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அனுபவம் வாய்ந்த சட்டத்தரணி டாக்டர் ரமணி ஜயசுந்தர தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாகவும், இதன் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்த ஆணைக்குழு முழுமையாகச் செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த போதிலும், நடைமுறையில் இந்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பெண் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்ட போதிலும், பிரதமர் அதில் பங்கேற்காமை வருத்தமளிப்பதாக சமிந்த்ராணி கிரியெல்ல குறிப்பிட்டார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பில் பிரதமரின் பங்களிப்பு இருந்திருந்தால் சிறந்த தீர்மானங்களை எட்டியிருக்க முடியும் என அவர் தெரிவித்தார். மேலும், 2025 செப்டம்பர் மாதமே இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டதால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டாலும், 2025 ஜனவரியிலேயே இதற்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் பெண்களின் உரிமைகள் குறித்துப் பேசும் அரசாங்கம், உள்நாட்டில் ஆணைக்குழுவை முன்னெடுத்துச் செல்ல அலுவலக வசதியைக் கூட வழங்கவில்லை என அவர் சாடினார். எனவே, பதவி விலகிய தலைவரை மீண்டும் நியமிக்கவோ அல்லது புதிய ஒருவரை நியமிக்கவோ ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தும் அவர் கடும் கவலை வெளியிட்டார். அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு முழுவதும் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் 60 கொலைகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருவதாகவும், இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுவதாகத் தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.