நாட்டில் பாதாள உலக ஆட்சியை உருவாக்க முற்படும் அரசாங்கம்: சாகர காரியவசம் கடும் சாடல்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

நாட்டில் தற்போது நிலவும் சட்டமற்ற சூழ்நிலை மற்றும் வன்முறை கலாச்சாரத்திற்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் ஒரு சில சட்டத்தரணிகளே பிரதான பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (16) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் நாட்டின் ஜனாதிபதியின் இல்லத்தைத் தாக்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களை நீதிமன்றத்திற்குள் கைதட்டி வரவேற்று, குற்றவாளிகளை உத்வேகப்படுத்தியதன் விளைவையே இன்று நாடு அனுபவிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சட்டத்தரணியாக இவ்வாறான கீழ்த்தரமான செயல்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும், சட்டத்தை மீறுபவர்களைக் கொண்டாடியவர்கள் “தினை விதைத்தவன் தினை அறுப்பான்” என்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்துத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 71 மற்றும் 89ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி ஏற்படுத்திய கிளர்ச்சிகள் மற்றும் 30 வருட கால எல்.டி.டி.ஈ பயங்கரவாதம் போன்ற பாரிய யுத்தங்களின் போது கூட ஏற்படாத ஒரு அச்சம் இன்று பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் மட்டும் 111 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் 60 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 47 நாட்களில் மாத்திரம் 9 கொலைகளும் 9 துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் புள்ளிவிபரங்களை முன்வைத்தார். குறிப்பாக, அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டமை அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது எனவும், மாற்றுக்கருத்துடைய அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் உயிர்களுக்கு இன்று பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

இந்த வன்முறைகளின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக மக்கள் சந்தேகிப்பதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், கறுப்பு அங்கி அணிந்த சட்டத்தரணிகள் மற்றும் மகா சங்கத்தினர் மீது எவ்விதத் தயக்கமுமின்றித் தாக்குதல் நடத்தப்படும் என அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் அண்மையில் விடுத்த எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த கால யுத்தம் என்பது அரசியல் தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது எனப் பிரதமர் அண்மையில் தெரிவித்த கருத்தானது, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர், இதற்காகப் பிரதமர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தினார். தேர்தல்கள் மூலம் மீண்டும் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்துகொண்டுள்ள தற்போதைய திசைகாட்டி அரசாங்கம், பாதாள உலகக் குழுக்களின் உதவியுடன் நாட்டை ஆளவும் அதிகாரத்தைத் தக்கவைக்கவும் முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், இந்த நாட்டைப் பாதாள உலகக் கூடாரமாக மாற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது எனத் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.