தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் முன்வைக்கடவிருக்கும் வரைவு: தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்தாலோசிக்க முனைப்பு

Meiveli Media Team

தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் ஏக்கிய இராச்சிய வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த் தேசியப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை நிராகரித்து, அதற்குப் பதிலாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

அக்கடிதத்துக்கு பதில் அனுப்பிவைத்த சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாரின் அழைப்புக்கடிதத்தின் இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.