வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்: யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்
Meiveli Media Team

வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் மக்கள் பிரச்சனைகளை விளங்கி கொள்ளும் எப்படியான அரசாங்கம் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினோம். ஊழல்களை அழித்தொழிப்போம் எனத் தெரிவித்தோம். ஊழல் தர சுட்டெண்ணில் நாடு முன்னேறியுள்ளது. ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை ஒரு ரூபா பணத்தையும் ஊழல் செய்வதில்லை. வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு பேரை விலக்கியிருந்தார். அதற்கு காரணம் உங்களுக்குத் தெரியும் தானே? ஊழலை நாம் ஒழிப்போம். பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்றோம். மக்களின் காணிகளை மீள கையளித்து கொண்டு வருகிறோம். சில காணிகளை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. சில காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது.
பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம்.வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம் என அவர் தெரிவித்துள்ளார்.

