கொழும்பு பாடசாலை மதில் இடிந்து விழுந்து விபத்து: மூன்று மாணவர்கள் படுகாயம்; ஒருவர் கவலைக்கிடம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

கொழும்பு 8, பொரளை சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகளின் போது, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான பெக்கோ (Backhoe) இயந்திரம் ஒன்று எதிர்பாராத விதமாக மதிலுடன் மோதியதில் மதில் சரிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தின் போது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நின்றிருந்த 16 வயதுடைய மூன்று மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய பெக்கோ இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


