மதத் தலைவர்களுக்கு அரசு அச்சுறுத்தலாக மாறியுள்ளது – மகேஷ் சேனாநாயக்க

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அனைத்து மதத் தலைவர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

இன்று (10) எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். புத்த பிக்குகள் மற்றும் பிற மத குருமார்கள் அரசால் இலக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை புத்தர்சிலை சம்பவம் தொடர்பாக கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் 26 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் மூலம் புத்த மதத்திற்கும் பிற மதங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசு மத வழிபாட்டு இடங்களை தொந்தரவாக பார்க்கும் மனப்பாங்கில் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மக்களை மதங்களிலிருந்தும் மதத் தலைவர்களிலிருந்தும் விலக்கி, “ஒரே கட்சி – ஒரே நாடு” என்ற கருத்தை நடைமுறைப்படுத்த அரசு முயல்கிறது என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும் இனவாதம் அல்லது மதவாத அரசியலில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் அநீதிகளுக்கு எதிராக மௌனம் காக்க மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பேரழிவுகளின் போது அரசால் செய்ய முடியாத சேவைகளை மதத் தலைவர்கள் மக்களுக்காக செய்துள்ளதாகவும், “டிட்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வழங்கிய சேவைகள் குறிப்பிடத்தக்கவை என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, அரசு தேர்தலை நடத்த அஞ்சுவதாகவும், மக்களின் நம்பிக்கை சிதைந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியாக எந்த நேர்மறை முன்னேற்றமும் இல்லை என்றும் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.