கிவுல் ஓயா திட்டம் பிழையானது: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவிப்பு
Meiveli Media Team

பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா சாளம்பைக்குளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மதராசாவினை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரஜா சக்தி’ என்ற ஒன்றை உருவாக்குகின்ற பொழுது நாங்கள் சந்தோஷமடைந்தோம். அதன் ஊடாக குறித்த பிரதேசங்கள் முன்னேறும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், குறித்த நிர்வாகத்தைச் மேற்கொள்கின்றபோது குறித்த கிராமத்தில் இயங்குகின்ற கிராம அபிவிருத்தி சங்கம் உட்பட பல்வேறுபட்ட அமைப்புக்களுடனோ கல்விமான்கள் உடனோ, கலந்துரையாடப்படுவதில்லை. மாறாக கடந்த தேர்தலிலே தற்போதைய அரசாங்கத்திற்கு போஸ்டர் போன்ற வேலைகளைச் செய்தவர்களை பிரஜா சக்திக்கு தலைவர்களாக நியமித்து அவர்களுக்குக் கீழே அவர்கள் விரும்புகின்ற பலரை உறுப்பினர்களாக நியமித்துச் செயல்படுகின்ற ஓர் அமைப்பாக அது மாறி இருக்கின்றது. 75 வருட சாபக்கேடு என்று பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத ஒரு மோசமான செயலை செய்து கொண்டிருப்பது அவர்களுடைய எதிர்கால அரசியலுக்கு ஒரு பேர் ஆபத்தாக அமையும். கிவுல் ஓயா திட்டம் என்பது தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களிலே பாரம்பரியமான ஒரு பெரிய காட்டை அழித்து உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக சாளம்பைக்குளம், பெரியமடு, அல்லது மடு ஆகியவை 2009க்கு பின்னரே காடுகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், குறித்த காடானது பல தசாப்தங்களுக்கு முன்னர் காடாக வர்த்தமானியில் அறிவக்கப்பட்டதாகும்.
இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக பழமையான 5,000 ஏக்கர் உள்ள காட்டை அழிக்கவுள்ளனர். பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காகவும், வேறு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரினவாத மக்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றம் செய்வதானது, மிகப்பெரிய சதியாகும். குறித்த சதிக்காகவே 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகளை அழித்து செய்கின்ற கிவுல் ஓயா திட்டமானது ஒரு பிழையான திட்டமாகும். சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என சிந்திப்பவர்கள் இதற்கு எதிராகவே வழக்கு போட வேண்டுமே தவிர 100 வருடம் பழமையான மன்னார் புத்தளம் வீதியை மூடுவதற்கு வழக்கு போட்டு வெற்றியடைந்து, அதன் ஊடாக அதனை நியாயப்படுத்தி பேசுவது என்பது நியாயமானதன்று. கிவுல் ஓயா திட்டம்தான் உண்மையான சுற்றுச்சூழலிற்கு பாதிப்பாகும். தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்ற வவுனியா மாவட்டத்திலே அல்லது வன்னி மாவட்டத்திலே இவ்வாறு செய்வதானது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் இதற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு தமிழ் தரப்பு எங்களை அழைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்திலே எங்கள் கட்சியும் பூரண ஆதரவை கட்டாயம் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

